நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது: மறுக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

0
113

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பணத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் முதன் முறையாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்த நிலையிலே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலே, அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய சந்தேக நபர் டொலரை மாற்றும் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட சந்தேக நபரிடம் இருந்து 400,000 ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்கும் வகையிலே நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரம் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் பிரச்சினையாக இருக்குமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.