மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள்: தாய்லாந்தின் உதவியை நாடும் இலங்கை

0
118

மியன்மாரில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 56 இலங்கைப் பிரஜைகளை விடுவிப்பதற்கு உதவுமாறு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினிடம் (Srettha Thavisin) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் வகையில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் 56 பேர் மியன்மாரில் உள்ள ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டு இணையக் குற்றங்களில் ஈடுபடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணினி தொடர்பான தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றப்பட்ட குறித்த இலங்கையர்கள் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாயலாந்து எல்லைக்கு அருகில் உள்ள மூன்று தனித்தனி இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோய் ஆற்றுக்கு அருகிலுள்ள பகுதியில் 8 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தாயலாந்து எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் 18 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் மற்றும் யுவதிகள் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்படுவதாகவும் சிலர் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.