இலங்கையின் கடைசி மன்னனின் நினைவு தினம் கண்டியில் அனுஷ்டிப்பு: பரம்பரையினர்களும் பங்கேற்பு

0
104

இலங்கையின் இறுதி மன்னரான கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் 192 நினைவு தினத்தை முன்னிட்டு, தானம் மற்றும் விசேட பூஜைகள் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீநாத ஆலயத்தில் நடைபெற்றது.

இலங்கையை ஆட்சி செய்த இறுதி மன்னரான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட பின்னர் தமிழ் நாட்டின் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி உயிரிழந்தார். அதனை நினைவுகூரும் வகையில் இந்த சமய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் உறவு முறை பரம்பரையை சேர்ந்த தற்போது திருகோணமலை மற்றும் கண்டியில் வசித்து வரும், மோகன் பேரின்பநாயகம்,அருண் செல்வராஜ், என். சண்முகராஜா, ரமேஷ் சுப்ரமணியம்,என். ஞானேஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் உறவினர்கள் தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.