10, 000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

0
121

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30.01.2024) தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டது.

 தேசிய நிகழ்வு

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் (05.02.2024) ரங்கிரி தம்புளை விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.

உரித்து பத்திரங்களை பெற்றுக் கொள்வோரின் உணவு தேவைகளுக்கு அவசியமான நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

10, 000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி | Issuance Of 10 000 Land Bonds Completed

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதோடு அதற்காக வரவு செலவு திட்டத்திலும் 2 பில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகள் அனைத்தும் முழு உரிமையுள்ள காணிஉறுதிப் பத்திரங்களாக மாற்றப்படும். காலணித்துவ ஆட்சியில் வெளிநாட்டவர்கள் இலங்கையில் கையகப்படுத்திய காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக உள்நாட்டவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் ஊடாக வழங்கியிருந்தனர்.

இருப்பினும் 1935ஆம் ஆண்டில் காணி கட்டளைச் சட்டத்தின் ஊடாக உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக மற்றுமொரு அனுமதி பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் காணிகளில் விவசாயம் செய்வதற்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்குமான அனுமதிகள் வழங்கப்பட்டது.

இருப்பினும் அந்தக் காணிகளை விற்பனை செய்தல் அல்லது வேறு தரப்பினருக்கு கைமாற்றுதற்கான உரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என காணி ஆணையாளர் பந்துல ஜெயசிங்ஹ தெரிவித்தார்.