தமது காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள்..!

0
128

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன.

இன்னும் இந்த மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் இராணுவ முகாம்களை வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மட்டக்களப்பு குருக்கள்மடம் மைதானமானது பாடசாலைக்கு சொந்தமானது என்றாலும் இன்னும் இராணுவம் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றது.

அதனை விடுவிக்க மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கில் பலாலி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் அந்த மக்கள் வேலிகளுக்கு அந்தப்பக்கம் இருந்து பார்த்துக்கொண்டிருக்கையிலேயே இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். மக்கள் காணிகளையே இராணுவம் வைத்துள்ளது என்றார்.