ஜனாதிபதி தேர்தல்: மொட்டு கட்சிக்குள் விரிசல்

0
125

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து மோதல் தற்போது அரசியல் களம் வரை வந்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வெளிப்படையாக அறிவித்துவரும் நிலையில் அது அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் நிலைப்பாடு அல்லவென மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, விதுர விக்ரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர உட்பட மேலும் சில உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளரான சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த மறுத்து வருகின்றனர்.

தாம் ரணிலை ஆதரிக்கபோவதில்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் அவர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்லவென கூறிவருகின்றனர்.