கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஷால்

0
120

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் 28ம் திகதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களுக்கே பேரதிர்ச்சியாக மாறியது.

பல இலட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால், நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

அதற்காக காணொளி வெளியிட்டு மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய விஷால் நடிகரும், நண்பருமான ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மனமுருகி வேண்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு விஷால் உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில், “கலையுலகம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனிதர் என்று பேர் வாங்கிய ஓர் அரசியல்வாதி, துணிச்சலான அரசியல்வாதி என்று பெயர் வாங்கியவர் விஜயகாந்த். பொதுவாக ஒரு நல்ல மனிதர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் நான் சொல்லும் ஒரு வார்த்தை இதுதான். ‘என்னை மன்னிச்சிடு சாமி’ அவ்வளவுதான். நான் அவரது இறுதிச் சடங்கில் அவருடன் இருந்து அவருடைய முகத்தை பார்த்திருக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றும் நடிகர் விஷல் உருக்கமாக பேசியுள்ளார்.