கொக்குவில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விளக்கமறியலில்

0
152

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞரொருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், அவரது தாயார், சகோதரி ஆகிய 3 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் மதுபோதையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அந்த பகுதி வீதியில் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துகொண்டார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் மற்றும் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.

கொக்குவில் பொலிஸார் மீது தாக்குதல் : விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் | Three Members Of Same Family Have Been Remanded

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்ததையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது அவரை வாயால் கடித்து சீருடையை கிழித்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீது இளைஞனுடன் அவரது தாயார் சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் தாக்குதல் நடத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது