ஆஸ்திரேலியப் பெண் சட்டப் போராட்டத்தில் வெற்றி: இறந்த கணவரின் விந்தணுவைச் சேமித்து வைக்க உத்தரவு

0
115

விந்தணு தானம் என்பது எமது சமூகத்தைப் பொறுத்தவரை அந்நியமாக இருந்தாலும் சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரையில் தற்போது பரீட்சியமடைந்து வருகிறது. விந்தணு தானம் மூலம் ஏராளமான குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன என்பதனை மறுக்க முடியாது.

இந்த நிலையில் 62 வயதான அவுஸ்திரேலிய பெண்ணொருவர் இறந்த கணவரின் விந்தணுவை பெறுவதற்கான சட்ட நவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி தம்பதிகள் இறப்பதற்கு முன்னதாக குழந்தையை பெறுவது குறித்து அவுஸ்திரேலிய நீதிமன்றம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குறித்த தம்பதி கடந்த 2019 ஆம் ஆண்டில் தங்களது 31 வயது மகனை வீதி விபத்தில் பறிகொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மற்றுமொரு குழந்தையை பிரசவித்து குறித்து அந்த தம்பதி பரிசீலித்து வந்துள்ளது.

இந்த நிலையில் தமது கணவரின் விந்தணுவை பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெறுவது குறித்த முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கணவர் இறந்துவிட மனைவி அவரது விந்தணுவை சேகரித்து சேமிக்குமாறு வைத்தியசாலையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் வைத்தியசாலை காலம் தாழ்த்தியதுடன் உயர் நீதிமன்றத்தில் அவசர உத்தரவை பெறுமாறு குறித்த பெண்ணை நிர்பந்தித்துள்ளது. இறப்பிற்குப் பின்னர் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் விந்தணுவை சேகரிக்க வேண்டுமென ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த பின்னணியில் விந்தணுவை பெற்று சேமித்து வைக்க முடியுமென அவுஸ்திரேலிய உயர் நீதிமன்ற நீதிபதி ஒப்புக் கொண்டதுடன் கருத்தரிப்பிற்கு பயன்படுத்துவதற்கு முன்னதாக நீதிமன்ற உத்தரவை பெருமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவு கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வழங்கப்பட்ட போதும் தற்போதுதான் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அசாதாரணமாக இருப்பினும் அவுஸ்திரேலியாவில் இறந்தவர்களின் விந்தணுக்களை சேகரித்து சேமிப்பது புதிதான விடயமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.