வணிக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக் கடலில் போர் கப்பல்களை நிறுத்தியது இந்தியா

0
175

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.

புதிய மங்களூரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வழியில், இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலுக்கு உள்ளாகி மும்பை துறைமுகத்துக்கு வந்துள்ள ‘எம்வி கெம் புளூட்டோ’ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு விரிவான ஆய்வு நடத்தியது.

இந்த நிலையில் “அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்களில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், கண்காணிப்புக்காக P-8I நீண்ட தூர சுற்றுக்காவல் விமானம், போர்க் கப்பல்கள் ‘ஐஎன்எஸ் மோர்முகாவ்’, ‘ஐஎன்எஸ் கொச்சி’ மற்றும் ‘ஐஎன்எஸ் கொல்கத்தா’ ஆகிய மூன்று கப்பல்களைப் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லைபீரியா நாட்டு கொடி பொருத்தப்பட்ட ‘எம்.வி. கெம் புளுட்டோ’ வணிகக் கப்பல், சவுதி அரேபியாவின் அல் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புதிய மங்களூரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அக்கப்பல் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை. தாக்குதல் குறித்து அமெரிக்க தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள் கூறுகையில், எம்வி கெம் புளூட்டோ கப்பல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒருவழி ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது,” என்று தெரிவித்திருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள் வணிகக் கப்பல்களை நோக்கித் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான எம்வி கெம் புளூட்டோ கப்பல் 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியட்னாமிய பணியாளர்களுடன் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

இது குறித்து இந்திய கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்புக் குழுவினர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மை குறித்து முதற்கட்ட ஆய்வினை நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பரப்பளவு, அங்கு கிடைத்த பொருள்கள் மூலம் ட்ரோன் தாக்குதல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் என்ன வகையான மற்றும் எவ்வளவு அளவு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிய தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு தேவைப்படும்.

“வெடிகுண்டு அழிப்புக் குழுவின் ஆய்வினைத் தொடர்ந்து, எம்.வி. கெம் புளூட்டோவை இயக்குவதற்காக மும்பையில் உள்ள அதன் பொறுப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து சரக்குகளை மற்றொரு கப்பல்களுக்கு மாற்றும் முன்பு பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ள கவலை காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ‘ஐஎன்எஸ் மோர்முகாவ்’, ‘ஐஎன்எஸ் கொச்சி’ மற்றும் ‘ஐஎன்எஸ் கொல்கத்தா’ ஆகிய மூன்று கப்பல்களை அரபிக்கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது,” என்றார்.

முன்னதாக, ‘எம்.வி.சாய்பாபா’ என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அந்தக் கப்பல் மீது கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோல, நேர்வே நாட்டின் ‘எம்.வி.ப்ளாமனென்’ என்ற ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.