ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு: ஜனவரி 16ம் தேதி ஆரம்பம்

0
112

அடுத்த மாதம், அதாவது ஜனவரி 16ஆம் திகதியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக தொடங்கவிருக்கிறது.

அந்தக் கோயில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15ஆம் திகதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனவரி 16ஆம் திகதியிலிருந்து ஜனவரி 22ஆம் திகதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தியும் அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்புகளை அனுப்பவிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாமல் இதர எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடியும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணமாக கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் துறவிகள், விஞ்ஞானிகள், இராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படவிருக்கின்றனர்.