புதிய தேசியக் கொள்கைகளை அறிவிக்க தயாராகும்  பொதுஜன பெரமுன

0
146

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது எதிர்கால அரசியல் கொள்கைகளை எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள அக்கட்சியின் தேசிய மாநாட்டில் வெளியிட உள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பன்நாட்டு இராஜதந்திரிகளுக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கையை வெளியிடும் பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகப்படுத்திய போது பொதுஜன பெரமுனவால் சில பொருளாதார கொள்கைகள் வெளியிடப்பட்டிருந்தது.

என்றாலும், அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் பிரதான பொருளாதார கொள்கைகளாக இருந்த இரசாயன உரத்தை தடை செய்தல் மற்றம் வற் வரி குறைப்பு என்பன நாட்டில் பாரிய தாக்கத்தை செலுத்தின.

வரி குறைப்பு காரணமாக நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. இதனால் பாரிய மக்கள் புரட்சி ஏற்பட்டதுடன், கோட்டாபய ராஜபக்ச தமது ஜனாதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டு தப்பிச்செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

அதேபோன்று ஒரே மாதத்தில் இராசாயன உரத்துக்கு தடைவிதித்து செயற்கை உரத்தை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் நாட்டில் உற்பத்திகள் குறைத்து அத்திவாசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர்

இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் புதிய பொருளாதார கொள்கைகளால் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாதென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சியின் தலைமைகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மொட்டுக் கட்சியின் முந்தைய பொருளாதார கொள்கைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் மக்கள் அறிவார்கள். அதனால், அறிமுகப்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த நடவடிக்கைகயை தற்காலிகமாக நிறுத்தி தேசிய மாநாட்டை மாத்திரம் நடத்துவோம் எனவும் அவர்கள் ஆலோசனைகளை கூறியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ அதிரிமான்ன தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும். அதனால் பொதுஜன பெரமுன தனது புதிய கொள்கையை தயாரித்து வருகிறது.

தேசிய மட்டத்தில் மீண்டும் கட்சியின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் இலக்காகக் கொண்டே இந்த மூலோபாய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பதற்கான கலந்துரையாடல்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மைய நாட்களாக நடத்தி வருகிறது.

அதன் ஒருகட்டமாகவே கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறது.

தேர்தல் பணிகளை முன்னெடுக்க எதிர்வரும் ஜனவரி மாதம் விசேட குழுவொன்றை நியமிக்கவும் பொதுஜன பெரமுன தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.