வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – இன்று விசாரணைக்கு

0
212

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது, யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால், கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது சட்ட வைத்திய அதிகாரி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றுமொரு இளைஞன் உள்ளிட்ட ஐவர் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர். 

அதில் மூன்றாவது சாட்சியமான உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பெயரை குறிப்பிட்டு, அடையாளம் கூறியதுடன், அங்க அடையாளங்களை கூறி மேலும் மூவரை அடையாளம் கூறி இருந்தார். 

சாட்சி அடையாளம் கூறிய ஐவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நீதவான் உத்தரவிட்டதை அடுத்து நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்து  நேற்று முன்தினம் சனிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தவும் பணித்தார். 

கைதான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களாலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.