ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2071ல் 40 மில்லியனைத் தாண்டும்

0
111

2071 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவின் சனத்தொகை 40 மில்லியனைத் தாண்டிவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பதிவாகும் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வுகளை அடிப்படையாகக்கொண்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைக் கணித்துள்ளது.

அவுஸ்திரேலியர்களில் 67 வீதமானோர் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர் என 2022 ஜுன் இறுதி தரவுகள் தெரிவிக்கின்றன. 2032 ஆம் ஆண்டாகும்போது அந்த எண்ணிக்கை 68 வீதமாக அதிகரிக்ககூடும்.

2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அவுஸ்திரேலியாவில் தற்போது 26 மில்லியன் பேர் வாழ்கின்றனர். 2071 ஆகும்போது இந்த எண்ணிக்கை 34.3 மற்றும் 45.9 மில்லியன்வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிக சனத்தொகை கொண்ட மாநிலமாக நியூ சவூத் வேல் உள்ளது. அங்கு தற்போது 8.1 மில்லியன் பேர் வசிக்கின்றனர். வருடாந்தம் மக்கள் தொகை 0.4 முதல் 1.2 வீதம்வரை அதிகரிக்கின்றது. 2071 ஆம் ஆண்டாகும்போது 10.8 முதல் 13.8 மில்லியன் பேர்வரை மாநிலத்தின் சனத்தொகை காணப்படும்.

விக்டோரிய மாநிலத்தின் சனத்தொகை 6.6 மில்லியனாக காணப்படும் நிலையில் 2071 ஆம் ஆண்டளவில் அதன் எண்ணிக்கை 9.3 மில்லியன் முதல் 13.8 மில்லியன்வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் 0.7 முதல் 1.5 ஆக காணப்படுகின்றது.