ஜனாதிபதிக்காக விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை!

0
197

ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ். மாவட்டத்திலும் கட்சியின் செயலாளரின் பங்குபற்றுதலுடன் வட்டுக்கோட்டை தொகுதியிலும் இடம்பெறுகின்றது.

தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதாவது வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் மக்களின் வாக்கில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை.

ஜனாதிபதிக்காக விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை(Photos) | Former Minister Vijayakala Maheswaran Ranil

ஜனாதிபதி தேர்தல்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டிருந்தார்.

அந்த காலத்தில் வடக்கு மக்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாக்களால் தோல்வியுற்று இருந்தார்.

அதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ளார். போட்டியிட்டு உண்மையிலேயே அமோக வாக்குகளை பெற்று நாட்டை முன்னோக்கி கொண்டு போவதற்கு உங்களுடைய போதிய ஒத்துழைப்பினை வேண்டி தான் இந்த கட்சி மறுசீரமைப்பு தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த ஒரு நோக்கத்தோடும் அதற்கும் அப்பால் இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு நமது கட்சித் தலைவரிடம் உள்ளது.

எனவே வடக்கில் உள்ள மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் தலைவருக்கு அமோக வாக்களித்து அவரை வெற்றியடைய வைப்பதன் மூலமே எமது நாட்டினை முன்னேற்றிக்கொள்ள முடியும்.

தற்போதுள்ள நிலையில் எமது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ் மக்கள் அமோக வாக்களித்து வெற்றி அடைய வைத்தோம்.

ஆனால் அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் அரசியல் சூழ்ச்சியினை செய்து நாட்டில் அரசியல் குழப்பத்தினை ஏற்படுத்திய போதிலும் அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தான் அந்த நிலைமையில் கூட நாட்டினை சுமூகமான நிலைக்கு கொண்டு வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியின் போது நாடு பொருளாதார ரீதியில் படுகுழிக்குள் தள்ளப்பட்டு இருந்தது.

வரிசை நிலைமையில் மாற்றம்

ஜனாதிபதிக்காக விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை(Photos) | Former Minister Vijayakala Maheswaran Ranil

பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் கடும் இன்னல்பட்டிருந்த போது தனி மனிதனாக நின்று இந்த நாட்டினை பொறுப்பெடுத்து இன்று வரிசை நிலைமையினை மாற்றி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுப்பதற்கான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்.

அதேபோன்று எங்களுடைய தலைவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தால் வடக்கு பகுதியில் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை கட்டாயமாக நிறைவேற்றுவார்.

இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மூன்று நேர உணவினை கூட உண்ண முடியாத நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள்.

கடந்த காலங்களில் நாங்கள்விட்ட பிழைகளை விடாது எமது கட்சி தலைவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

எமது ஐக்கிய தேசிய கட்சியினை பலப்படுத்துவதன் மூலம் வடக்கு மக்கள் மாத்திரமில்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும்.

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இந்த நாட்டினை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடிய வழி வகைகள் ஏற்படும். எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி ஆக்குவதற்கு அமோக வாக்களித்து தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.” என கூறியுள்ளார்.