120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை – இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி!

0
227

ஒவ்வொரு நாளும் அன்றாட தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு மனநிலை என்பது அவனது அனைத்து செயல்களிலும் பெருமளவு செல்வாக்கு செலுத்துகிறது.

இவ்வாறு மனநிலைமையை மாற்றுவதிலும், சீராக வைத்துக் கொள்வதிலும் பெரும்பாலான விடயங்கள் பங்கு வகித்தாலும் காலநிலை என்பதும் ஒரு காரணியாக அமைகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் பார்க்கப்போனால் தற்போது பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பெரும் தாக்கமாக இருப்பது இந்த அதீத உஷ்ண காலநிலையாகும்.

வெப்பத்தை தாங்க முடியாது பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியதாகவுள்ளது மனித இனம். சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியின் வெப்பநிலை

பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரியனின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனினும் இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல்முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற்றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

வெப்பநிலை உயர்வு

1850ஆம் ஆண்டு முதல் 21ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலத்தில் பூமியின் தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு 1.5 பாகை செல்சியஸை தாண்டும் என்றே பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3 – 5 செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

பூமியின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் அதிகரிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை 1.5 பாகை செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதே பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும், கொள்கை வகுப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மாறி வரும் காலநிலையால் எவ்வளவு பெரிய தாக்கங்கள் ஏற்படும் என்ற கேள்விக்குரிய பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது.

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

நன்னீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது போன்ற வகைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இருக்கக் கூடும்.

உலகம் மேலும் சூடானால், நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் அடைமழையும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக்கூடும்.

அதே சமயத்தில், கடற்கரையை ஒட்டி அமையாத பகுதிகளில் கோடை காலத்தின்போது, வெப்பநிலை அதிகரித்து வரட்சிக்கு வித்திடும் சூழ்நிலை ஏற்படக்கூடும். புயல்களின் காரணமாக ஏற்படும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் கடலில் கலந்து, அதன் நீர்மட்டம் உயர வழிவகுக்கும்.

இதுபோன்ற அசாதாரணமான இயற்கையின் கோரத்தாண்டவங்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டம் இல்லாத ஏழை நாடுகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.

தற்போதைய நிலமை

இந்த நிலையில் தற்போதைய சூழலை ‘பூமி கொதித்துக் கொண்டிருக்கும் காலம்’ (Era of global boiling) என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அண்மையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலநிலை தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார். “காற்றை சுவாசிக்க முடியவில்லை, வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை, கரிம எரிபொருள் மூலம் எட்டப்படும் லாபத்தையும் பருவநிலை தொடர்பாக எதுவும் செய்யாமல் இருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை “தொழிலாளர்கள் வெப்பத்தில் சரிகின்றனர். காலநிலை மாற்றத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

தரவுகளின்படி, இந்த ஜூலைதான் பூமியின் வெப்பமான மாதம் என்று உலக வானிலை நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து, அன்டோனியோ குட்டரஸ் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுவரை நாம் பதிவு செய்துள்ளதிலேயே இந்த ஜூலையின் முதல் மூன்று வாரங்கள்தான் அதிக வெப்பமானது என்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் இயக்குநர் கார்லோ பியூன்டெம்போ ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதேநேரம் கடந்த 1,20,000 ஆண்டுகளில் இந்த ஜூலை தான் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது.

இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

“ஜூலையில் பல கோடி மக்களைப் பாதித்த தீவிர வானிலை என்பது துரதிஷ்டவசமாக, காலநிலை மாற்றத்தின் அப்பட்டமான உண்மை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் கூட” என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க கிழக்கு பசிபிக் சமுத்திரம் வெப்பமடைந்து வளிமண்டலத்தில் வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால், 2023 அல்லது 2024ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. 

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

இலங்கையின் நிலைமை

உலகத்தின் நிலைமை இவ்வாறு உருண்டோட பொருளாதார நெருக்கடியிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டிருக்கும் இலங்கைக்கு மிகப்பெரும் அடியாக இந்த காலநிலை தாக்கம் இருக்குமா என்பது தற்போது பலர் மனதிலும் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது.

பல பகுதிகளில் வறட்சி காரணமாக வாவிகள் குளங்களில் நீர் வற்றியுள்ளமை விவசாயத்திற்கும், நீர் மின் உற்பத்திக்கும் முட்டுக்கட்டையாக அமையும் சாத்தியம் எழுந்துள்ளது.

ஒரு பக்கம் அரசாங்க தரப்பிலிருந்து 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான மின்வெட்டு மேற்கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாகவும், மறுபக்கம் வரட்சியால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிவிப்புகளும் தகவல்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளோர்

120000 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஜூலை - இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரும் அடி | Sri Lanka Economic Powercut Today Weather Disaster

வரட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் 4 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

பொருளாதார நெருக்கடி எனும் பெரும் சுழலில் சிக்கி உடைந்து போயிருக்கும் இலங்கை மக்களுக்கு மற்றுமொரு வடிவில் இன்னுமொரு பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் சக்தி இருக்கிறதா என்பது சந்தேகமே என சமூக அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.