கறுப்பு ஜூலை நினைவேந்தலில் இனவாத வெறியாட்டம்; சப்பாத்து கால்களால் நினைவுச்சுடர்கள் மிதிப்பு!

0
171

கொழும்பில் நேற்று மாலை கறுப்பு ஜூலை இனப்படுகொலை 40ஆவது ஆண்டு நினைவுநாளை கடைப்பிடிக்க முற்பட்டபோது சிங்களக் கடும்போக்காளர்கள் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நிகழ்வை குழப்பியடித்துள்ளனர்.

கொழும்பு பொரளை பொதுமயானத்துக்கு முன்பாக (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்ட இடம்) கறுப்பு ஜூலை நினைவு நாளை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு 

நினைவேந்தலை சிங்கள ராவய அமைப்பு குழப்பவுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைவாக அங்கு ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பலர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

திட்டமிட்டவாறு மாலை 4.30 மணிக்கு நினைவேந்தல் சுடர்கள் ஏற்ற முற்பட்டபோது அங்கு வந்த சிங்கள ராவயவினர் குழப்பங்களை விளைவித்தனர். இதையடுத்து விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றதுடன் அவர்களை தள்ளிச் சென்றனர்.

கறுப்புப் ஜூலை நினைவேந்தலில் இனவெறி பிடித்தவர்களின் வெறியாட்டம்; சப்பாத்து கால்களால் நினைவுச்சுடர்கள் மிதிப்பு! | Racist Rampage At Black July Commemoration

இதன்போது சிறிதுங்க ஜெயசூரிய, சிறிநாத் பெரேரா ஆகியோர் நிலத்தில் விழுந்து காயமடைந்தனர். எனினும் வீதியின் மறுபுறத்தில் பொலிஸார் தள்ளிச் சென்றுவிட்டதும் ஏற்பாட்டாளர்கள் அங்கு சுடரேற்றத் தயாரானபோது சிங்கள ராவய அமைப்பினர் அங்கும் வந்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

 நினைவுச் சுடர்களை சப்பாத்துக் கால்களால் தட்டிய படையினர்

இதையடுத்துப் பொலிஸார், இராணுவத்தினர் அங்கு வந்து நினைவுச் சுடர்களை சப்பாத்துக்கால்களால் தட்டி அகற்றிய நிலையில் ஏற்பாட்டாளர்கள் பொலிஸார், இராணுவத்தினருடன் கடுமையாக முரண்பட்டனர்.

சுடரேற்றுவதற்கு அனுமதிக்காவிடின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்வோம் என்று கடும் தொனியில் எச்சரித்த பின்னரே பொலிஸார் ஒதுங்கினர்.

ஆனாலும் சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் சுடர்களை அப்புறப்படுத்தியபோது சந்தியா எக்னலிகொடவுக்கு முகத்தில் எண்ணெய் சிந்தியது. அவர் முகத்தைக் கழுவுவதற்கு கூட பொலிஸாரும், இராணுவத்தினரும் இடமளிக்கவில்லை. நிலத்தில் அவரையும் தள்ளி விழுத்தினர்.

கறுப்புப் ஜூலை நினைவேந்தலில் இனவெறி பிடித்தவர்களின் வெறியாட்டம்; சப்பாத்து கால்களால் நினைவுச்சுடர்கள் மிதிப்பு! | Racist Rampage At Black July Commemoration

இதன் பின்னர் ஏற்பாட்டாளர்களை அங்கிருந்து நாரஹேன்பிட்டிய பக்கமாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் தள்ளிச் சென்றதுடன் ஏற்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இதேவேளை, கறுப்பு ஜூலையை முன்னிட்டு சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். பேரணியில் கலந்துகொள்ள சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

லிப்டன் சுற்றுவட்டத்துக்கு பேரணியாக வந்த ஆர்ப்பாட்டகாரர்கள், அங்கிருந்து விகாரமஹாதேவி பூங்கா நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

அதேவேளை கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப்புலிகளே என்றும் அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பினர் கோக்ஷமிட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.