ஈஸ்டர் தாக்குதல்: இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்!

0
234

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவுகள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற காரணமாகயிருந்தவர்கள் அது குறித்து எந்த கழிவிரக்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லை.

எமக்கு நீதி வேண்டும்

அத்துடன் நீதிமன்றம் உத்தரவிட்டது போல இழப்பீட்டு தொகையை வழங்க முன்வரவில்லை என ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் கவலையும் ஆத்திரமும் வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உறவுகளை பலிகொடுத்த பல குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளிற்கு நீதி வழங்க வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் இழப்பீட்டினை செலுத்தாதமை எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்கள் பல விடயங்களை அலட்சியம் செய்து பழகியவர்கள் என கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களின் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெறலாம் என்ற பல எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்வது பெரியவிடயமில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்! | We Don T Want Compensation Easter Attack Srilanka

உறவுகளை இழந்தோர் கவலை

நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை மீளப்பெறப்போவதில்லை. ஆனால் இதற்கு காரணமானவர்கள் தங்கள் அலட்சியத்திற்கான விலையை செலுத்த வேண்டும் என தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த லெஸ்லி என்பவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல இந்த அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்றனர். இது கடும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தனது தந்தையை பறிகொடுத்த சுடாரா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்! | We Don T Want Compensation Easter Attack Srilanka

எனக்கு தந்தை மீண்டும் கிடைக்கப் போவதில்லை எங்களுக்கு இந்த பணம் தேவையில்லை ஆனால் இதற்கு காரணமானவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலில் தனது கணவரை இழந்த டபில்யூ. பீ. ஏ. டபில்யூ. பெரேரா கண்ணீருடன் கூறுகையில்,

எனது நேசத்திற்குரிய கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களின் ஒரு சதம் கூட எங்களுக்கு தேவையில்லை. நான் அவர்கள் குறித்து வெட்கப்படுகின்றேன். அவர்களின் பெயர்களை கூட கேட்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.