30 வருடங்களில் 20 மனிதப் புதைகுழிகள் : ஆவணங்களை அழிக்க உத்தரவிட்ட கோட்டாபய

0
399

சமூக மனிதப் புதைகுழிகள் தொடர்பான சகல ஆவணங்களையும் அழித்துவிடுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்ததாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டோ பெர்னாண்டோ கூறியிருக்கும் இந்த அதிர்ச்சியான தகவல்தான் இலங்கையிலும் சர்வதேசத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 30 வருடங்களில் மாத்திரம் 20 சமூக மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுதியளவில் அகழ்வு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரையில் இது தீர்க்கப்படாத சோகமான சம்பவமாகவே இருக்கிறது.

“இலங்கையில் உள்ள பாரிய மனிதப் புதைக்குழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்” என்கிற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் இலங்கையின் மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான தகவல்கள் கடந்தக் காலங்களில் வெளியாகி உலகையே உலுக்கியிருந்தது.

அதுபோல இலங்கையின் மான்னார், மாத்தளை மாவட்டங்கள் என மொத்தமாக 20 இடங்களில் மனித புதைக்குழிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, “1990ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்“ என கூறியிருந்தார்.

இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் மனித புதைகுழிகள் குறித்த விரிவான அறிக்கை

2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகள் தொடர்பான விசாரணையின்போது இந்த படுகொலைகளுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மனித படுகொலைகளுக்குப் பின்னால் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை புரிந்து கொண்ட அரசாங்கம் இந்த மனித புதைக்குழிகள் தொடர்பான விசாரணைகளை இடை நிறுத்தியதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவு முழுவதிலும் ஆழமற்ற புதைகுழிகளில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இந்த அறிக்கையை வெளியிட்ட அமைப்புகள் சந்தேகிப்பதோடு, பல பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கிறார்கள்.