ஜனாதிபதி ரணில் விசேட உரையில் விடுத்துள்ள அறிவித்தல்

0
207

நாட்டை மீண்டும் ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைக்கு இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, Ranil Wickremesinghe 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

“தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் இதன்போது விரிவாக விளக்கினார்.

மேலும், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி நாட்டுக்கு முன்வைத்தார்.

அரச நிதி மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ஆகிய பிரதான 04 தூண்களில் நாட்டின் எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விசேட உரையில் திட்டவட்டமாக வெளியிட்ட அறிவிப்பு | Special Speech Ranil Sri Lanka Development

இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக நிலைமாற்றும் செயற்பாட்டுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை அமுல்படுத்த தனியார் துறையிடமிருந்து முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டாய்வு முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.

நவீன உலகுக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கிச் செல்லும் என்றும், அதன் முடிவாக நாடு, பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எனவே நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதோடு, அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,

ஜனாதிபதி ரணில் விசேட உரையில் திட்டவட்டமாக வெளியிட்ட அறிவிப்பு | Special Speech Ranil Sri Lanka Development

முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்காக இளைஞர்களை தயார்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அந்தப் பணியை மேற்கொள்ளும் திறன் எமது இளைஞர்களிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லையென்றாலும் நாட்டிற்கு சிறந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2% வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடினமான பயணத்தின் போது அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்ட நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம் சிரமங்களையும் துன்பங்களையும் குறைத்து நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.