பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் மலையுச்சியிருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணின் தாய் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளா.
மகளுடன் பேச இரகசியக் குறியீடு
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. தற்போது, ஹவ்ஸியாவின் கணவர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தற்போது துவக்கப்பட்டுள்ள நிலையில், ஃபவ்ஸியாவின் தாயாகிய யாஸ்மின் (Nighat Yasmin Javed) சாட்சியமளிக்கும்போது சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ஃபவ்ஸியாவுக்குத் திருமணமாகி சில மாதங்களுக்குள்ளாகவே அன்வரின் முரட்டுத்தனம் குறித்து அவரது தாயாகிய யாஸ்மினுக்குத் தெரியவந்துள்ளது.
ஆனால், ஃபவ்ஸியாவின் மொபைலை கண்காணித்துக்கொண்டே இருந்திருக்கிறார் அன்வர். ஆகவே, மகளைக் குறித்து கவலையடைந்த யாஸ்மின், மகளிடம், உனக்கு ஏதவாது ஆபத்து என்று தோன்றினால் உடனடியாக, ‘I feel like cream cakes’ என்று எனக்கொரு குறுஞ்செய்தி அனுப்பு, உடனே நான் பொலிசாருக்குத் தகவலளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வந்த சாட்சிகள்
ஃபவ்ஸியா மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றிருந்தபோது, அங்கே வைத்தும் அன்வர் ஃபவ்ஸியாவை திட்டியதாக செவிலியர் ஒருவர் உட்பட சில பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்கள்.
ஃபவ்ஸியா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் செவிலியராக பணியாற்றிய Elizabeth Petty (41), தன்னிடம் ஒரு பெண், ஃபவ்ஸியாவை அவரது கணவர், நீ பிரசவத்தின்போது செத்துப்போய்விட்டால் நல்லது, நான் தப்பிவிடுவேன் என்று கூறியதாக தெரிவிக்க, ஃபவ்ஸியாவிடம் அது குறித்து அந்த செவிலியர் கேட்க, பயந்துபோயிருந்த ஃபவ்ஸியா, தன் கணவர் மிரட்டியது உண்மைதான் என அவரிடம் கூறியுள்ளார்.

ஃபவ்ஸியாவின் பக்கத்து படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியையான Francesca Cooper (34), அன்வர் தன் மனைவியை கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே இருந்ததாகவும், உன்னைத் திருமணம் செய்திருக்கவே கூடாது, பிரசவத்தின்போது நீ இறந்துபோனால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது.
