பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்த சில தீர்மானங்கள் மக்களுக்கு கஷ்டமாக இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் பின்னர் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் வீழ்ந்திருக்கும் நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்பதை உணர்ந்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்தார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளாவிட்டால் நாடு டொலர் பிரச்சினை மின்சார பிரச்சினை என பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது அன்றைய அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தார்.
ஆனால் அன்று அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவை கேலி செய்தார்கள். விமர்சித்துவந்தார்கள். அன்றைய அரசாங்கம் முறையாக நடவடிக்கை எடுக்க தவறியதால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதுடன் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையே நாடினார். அன்றைய அரசாங்கத்தினால் செய்ய முடியாமல் போனதை ரணில் விக்ரமசிங்க தற்போது தனிமனிதாக இருந்து அதனை செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கும் ஜனாதிபதி பல தடவைகள் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர்கள் யாரும் முன்வரவில்லை. மேலும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள பல கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது.
அதனால் மக்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தற்போது நாணய நிதியத்தின் உதவி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய பல தீர்மானங்களை ஜனாதிபதி எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைவிட அதன் அங்கீகாரம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தச்செய்திருக்கிறது. குறிப்பாக பெரிஸ் சமூகம் இலங்கையின் கடனை 15 வருடங்களுக்கு பிள்தள்ளி இருக்கிறது. அதேபோன்று உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன எமக்கு உதவுவதற்கு தற்பாது தயாராகி இருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு காட்டிய பச்சைக்கொடியே காரணமாகும்.
எனவே வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்பதை தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 40க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் விரைவில் இணைந்துகொள்ள இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.