IMF தொடர்பில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை; பந்துல குணவர்தன

0
214

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

இலங்கையை அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சி செய்தாலும் அரசியல் கருத்துக்கள் இன்றி இணக்கமான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் உலக நாடுகளை சமாளித்து இந்த நாட்டை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

IMF தொடர்பில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை; பந்துல | There Is No Need To Hide The Truth About The Imf

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து தெரிவித்த அவர், இதற்கு முன்னர் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டோம் என்று சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட கருத்து என்று சில விடயங்களைக் குறிப்பிட்ட அவர், நாங்கள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் அதன் பின்னர் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது மீண்டும் நடந்தால், நாடு இன்னும் மோசமான பாதாளத்தில் விழும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி நாட்டைப் பற்றிய தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம் என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாணய நிதிய ஒப்பந்தத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் இது தொடர்பான மாற்று ஆலோசனைகள் மற்றும் சாத்தியமான தீர்வுகளை சபையில் முன்வைக்க வேண்டும் என்றும் பின்னர் விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.