போதையில் அதிபரை கொட்டனால் தாக்கிய மாணவன்; வவுனியா பாடசாலையில் சம்பவம்

0
350

வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதிபர் மீது தாக்குதல் 

குறித்த நிகழ்விற்கு மாணவர்கள் எவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும், மாணவர்களது ஒழுக்கம் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதே அதிபர் மற்றும் ஆசிரியர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாக, காதில் தோடு அணிந்தவாறு மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்திருத்துள்ளார்.

குறித்த மாணவனை அவதானித்த அதிபர், மாணவன் அணிந்திருந்த தோட்டினை கழற்றிவிட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வு மண்டபத்தில் அதிபர், விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த போது கொட்டனால் அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அங்கு விருந்தினராக கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அதிபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த மாணவனைப் பிடித்து வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை

மதுபோதையில் அதிபரை கொட்டனால் தாக்கிய உயர்தர மாணவன் - பிரபல பாடசாலையில் சம்பவம் | Student Attacks Principal With Drunk In Vavuniya

காவல்துறையினர் இது தொர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவராவார்.

இதேவேளை, நேற்றைய தினம் (10) பிறிதொரு நகரப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற உயர்தர மாணவர் ஒன்று கூடலின் போது மாணவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுடன் பாடசாலை வளாகத்திற்குள் அதிக ஒலி எழுப்பி அசௌகரியத்தை ஏற்படுத்தியமையால் நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சிலர் வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்படத்தக்கது.