15 ஆயிரம் வைரக்கற்கள் பதித்த முதலை நெக்லஸ்; பிரம்மித்த பார்வையாளர்கள்..!

0
286

குஜராத்தில் நடைபெற்ற நகை கண்காட்சியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த முதலை நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும். இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும். இப்படி வண்ண வண்ண வைர கற்கள் பொருத்தப்படும் ஆபரணங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது உண்டு. அதேபோல, இந்த நகைகளின் விலையும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வைரங்களுக்கு ஏற்றாற்போல நிர்ணயிக்கப்படுகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுவரும் நகை கண்காட்சியில் தங்க நகை நிறுவனம் ஒன்று தங்களது முதலை நெக்லஸை பார்வைக்கு வைத்திருக்கிறது. இதில் 15,000 வைர கற்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிசைன் நெக்லஸை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். 

விலையுர்ந்த கற்கள் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் கண்காட்சி சூரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கே பல நிறுவனங்கள் தங்களது கலை நுணுக்கம் கொண்ட பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில், தங்கம், விலையுயர்ந்த கற்கள் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் ஆன பாராளுமன்ற கட்டிடம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதேபோல, இந்த முதலை நெக்லஸ் இந்த கண்காட்சியின் மையப்பொருளாக மாறியுள்ளது. இரண்டு முதலை உருவங்களின் மீது வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த நெக்லசின் விலை 30 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய அந்த நெக்லஸை தயாரித்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் மேத்தா, “எங்களின் முதலை நெக்லஸ் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாகும். இது 8000 உண்மையான வைரங்கள் மற்றும் 7000 வண்ண கற்கள் மற்றும் 330 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டது. டிசைன் செய்ய மூன்று மாதங்களும், நெக்லஸ் தயாரிப்பிற்கு இரண்டு மாதங்களும் ஆனது” என்றார். இந்நிலையில், இந்த முதலை நெக்லசின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.