இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி

0
447

ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேமானது. இந்து கடவுளின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு சிறப்பாக கொண்டாடப்படும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாள் ஆகஸ்ட் 31 புதன்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்துக்கள் விநாயகரை வழிபடுவார்கள் அதாவது விநாயகருக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபடுவார்கள். தெருக்களில் விநாயகர் சிலை வைக்கப்படும். ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அதேபோல் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வருகின்றது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி 15ஆம் நாள் வருகிறது. விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் காலை 11.04 முதல் இன்றைய தினம் மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக இந்து மக்களின் நம்பிக்கை ஆகும்.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார். மகாராட்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்குவர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்:

ஆகஸ்ட் 30 – பிற்பகல் 3:33 மணி
ஆகஸ்ட் 31 – பிற்பகல் 3:32 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.