எமக்கு முன்னுரிமையின்றேல் இடைக்கால வரவு – செலவு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் – பொதுஜன பெரமுன

0
395

இராஜாங்க அமைச்சு நியமனத்தில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்காவிடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் நாளை மறுதினம் பாராளுமன்றில் முன்வைக்கும் இடைக்கால வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள்கள் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் இவ்வார காலத்திற்குள் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்கமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

தற்காலிக அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக முக்கிய அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுன புதிய அமைச்சுக்கள் தொடர்பான பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் அண்மையில் சமர்ப்பித்துள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகி;ன்றன.முக்கிய அமைச்சுக்களை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்தின் உண்மை வியூகம் இல்லாமல் போகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சுக்களை 18ஆக வரையறுத்து,இராஜாங்க அமைச்சு நியமனம் அவசியமற்றது என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ள நிலையில்,பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சினை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய இவ்வார காலத்திற்குள் இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சு நியமனத்தில் தமக்கு முன்னுரிமை வழங்காவிடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால வரவு- செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.