அமைச்சர்களின் அதிகாரங்களுக்கு இணையாக தம்மிக்கவுக்கு முக்கிய பொறுப்பு!

0
505

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக தம்மிக்கவுக்கும் முக்கிய பொறுப்பு வழஙப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் அக் குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து அமைச்சராக நியதிக்கப்பட்ட தம்மிக்க சில தினங்களிலேயே அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார். அத்துடன் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை விட்டு விலக வேண்டாம் என தம்மிக்க பெரேராவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.

அதேவேளை எதிர்வரும் சில தினங்களில் தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தற்போது தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய குழுவொன்றின் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.