எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

0
85

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, லங்கா I.O.C விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் நாட்டின் தற்போதைய நிலைமையக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த கோசல விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், லங்கா I.O.C நிறுவனம் மாத்திரமே நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கிறது.

இந்நிலையில், அதனை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு தங்களுக்கு உள்ளதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த கோசல விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நேற்றைய தினம் (16-07-2022) நாட்டை வந்தடைந்தது.

எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும், தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வாகனங்களை வைத்திருப்போர், www.fuelpass.gov.lk என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.