எரிபொருளை பதுக்கி வைத்தால் கைது செய்யப்படுவர்

0
196

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்து கூடுதலான விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

தற்போது எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து சிலர் எரிபொருட்களை பெற்று கூடுதலான விலைக்கு மறைமுகமாக விற்பனை செய்வதாக அறிய முடிகின்றது.

இதனால் அத்தியாவசிய சேவை, அரசாங்க ஊழியர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொது மக்களும் எரிபொருள் இல்லாமையினால் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கூடுதலான விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்யும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களை பதுக்கி வைத்திருப்போர்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.