தென்னிலங்கை அரசியல் குழப்பங்கள் மக்கள் நலச் செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது – டக்ளஸ் தேவானந்தா

0
380

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் , அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கும்  கிளிநொச்சிக்கும் இடையிலான யாழ். ராணி புகையிரத சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை  ஆரம்பிக்கப்பிக்கப்பட்டது. 

அது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான  புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த கோரிக்கை, சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதனை  துறைசார்ந்த அமைச்சருடன் கலந்துரையாடி, இந்தச் சேவையை  ஆரம்பிப்பதற்கு தேவையான  ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களுக்கும் இந்தச் சேவை  மிகவும் வரப்பிரசாதமாகும்.

இச்சேவையினை வவுனியா வரையில் விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். அதுதொடர்பாக ஆராய்ந்து, சாத்தியமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

தற்போது புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது போன்று, விரைவில் தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையும், பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையும் இடம்பெறும். 

எமது மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆணையினை எமக்கான பலமாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தென்னிலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எமது மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்றெடுப்பதே எமது வழிமுறையாக இருக்கின்றது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதற்கயை தமது பயணமும் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னகர்ந்து கொண்டே இருக்கும் என்றுள்ளது.