இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி 5 வழிமுறைகளில் உதவிகள் – இலங்கைக்கான சீனத்தூதுவர்

0
726

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைவதை முன்னிறுத்தி 5 வழிமுறைகளில் உதவிகளை வழங்கிவருவதாகவும், குறிப்பாக இலங்கையில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்திற்குச் சென்ற சீனத்தூதுவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

அவரது விஜயம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கைக்கான சீனத்தூதுவர் கி சென்ஹொங் கடந்த 24 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான தனது 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்.

அங்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட சீனத்தூதுவர், அவரது விஜயத்தின் முதலாவது நாளில் சீன வர்த்தகப்பேரவையின் பிரதிநிதிகளுடனான வர்த்தக மாநாடொன்றுக்குத் தலைமைதாங்கினார்.

இதன்போது இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளிலிருந்து மீட்சியடைவதற்கு உதவும் வகையில் இலங்கையில் அதிகளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை சீனா வரவேற்பதாக சீனத்தூதுவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைவதை முன்னிறுத்தி பல்வேறு வழிமுறைகளின் ஊடாக கடனுதவிகளை வழங்கல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்தும் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்களைத் துரிதப்படுத்தல், இருதரப்புக் கடன் மீள்செலுத்துகைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் இலங்கைக்கு உதவுதல் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் பின்னர் மீண்டும் சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பல் ஆகிய 5 பரிமாணங்களிலான உதவிகளை சீனா வழங்கிவருவதாகவும் அந்நாட்டுத்தூதுவர் கி சென்ஹொங் சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்திற்கு படகில் விஜயம்செய்த சீனத்தூதுவரிடம் கைத்தொழில் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுடன் தொடர்புடைய துறைமுக நடவடிக்கைகளில் சீனாவை முதலீடு செய்யுமாறு இலங்கைத் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் கிழக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவசியமான உணவுப்பொதிகளையும் தூதுவர் கி சென்ஹொங் வழங்கிவைத்தார்.

இந்த உணவுப்பொதிகள் சீனாவின் யுனான் மாகாணத்தைச்சேர்ந்த மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை என்பதுடன், அவை ஒவ்வொன்றும் 5200 ரூபா பெறுமதியானவையாகும். அத்தோடு கல்முனை இளைஞர், யுவதிகள் பயன்பெறக்கூடியவகையிலான விளையாட்டு உபகரணங்களையும் சீனத்தூதுவர் நன்கொடையாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.