இலங்கையில் அவசரகால பிரகடனம்!

0
697

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் சர்வதேச நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இலங்கை பிரஜைகளின் உண்மையான சவால்களை எதிர்கொள்வதற்கு நீண்ட கால தீர்வுகளே அவசியமாகும் என்றும், மாறாக அவசரகால நிலைமை சட்டத்தினால் அதனை செய்ய முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. 

மேலும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்காக போராடும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் சர்வதேசம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பதிவில், ‘அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள் நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால் அமைதியான கருத்து வேறுபாடுகள் அவசரநிலை அல்ல. கருத்து வேறுபாடுகளுக்கான அடிப்படைக் காரணங்களைக் முறையாகக் கையாள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

‘தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கைப் பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத அமைதியான ஆர்ப்பாட்டங்கள் காட்டியுள்ளன. அவசரகால நிலை நிச்சயமாக நாட்டின் சிரமங்களைத் தீர்க்க உதவாது என்பதோடு எதிர் விளைவை ஏற்படுத்தும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் அவரது டுவிட்டர் பதிவில், ‘மற்றொரு அவசரகால நிலைமை கவலையளிக்கிறது. அமைதியான குடிமக்களின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும்.

இலங்கையர்களின் உண்மையான சவால்களை எதிர்கொள்வதற்கும் நாட்டை மீண்டும் செழிப்பான பாதையில் கொண்டு செல்வதற்கும் நீண்ட கால தீர்வுகள் தேவை. மாறாக அவசரகால நிலைமை சட்டம் அதைச் செய்ய உதவாது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் தனது டுவிட்டர் பதிவில், ‘தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம்.

அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் மதிக்கப்பட வேண்டும். அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக உரையாடல் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன.’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நியூசிலாந்து

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பல்டன் தனது டுவிட்டர் பதிவில், ‘தெளிவான தெளிவுபடுத்தல் வழங்கப்படாமல், இலங்கையில் மீண்டும் அவசரநிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

இலங்கையர்களின் சமீபத்திய எதிர்ப்புக்கள் மிகவும் அமைதியானவை. அவர்களின் குரல் கேட்கப்படுவதற்கு தகுதியானது. இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கனடா

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தனது டுவிட்டர் பதிவில், ‘கடந்த வாரங்களில், இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்களை பெருமளவில் ஈடுபடுத்தியுள்ளன.

மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகவுள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே

நோர்வே தூதுவர் டிரைன் ஜோரன்லி எஸ்கெடல் தனது டுவிட்டர் பதிவில், ‘இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகிப்பதும், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் போது அவசர நிலையை பிரகடனப்படுத்துவதும் கவலைக்குரியது. அனைத்து தரப்பினரையும் நிதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்ஸர்லாந்து

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்லர் தனது டுவிட்டர் பதிவில், ‘பல வாரங்களாக இலங்கையர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனெனில் அவர்கள் நம்பிக்கையிழந்தும் மற்றும் துன்பத்திலும் உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கு, உரிய காரணங்கள் தீவிரமாகவும் நம்பகத்தன்மையுடனும் இப்போது கவனிக்கப்பட வேண்டும். அவசரகால நிலை எந்த வகையில் எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்பது கடினம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.