தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
502

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சமாந்திரமாக அரசியல் குழப்பங்களும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றன.

நாடு மூழ்கிக் கொண்டிருக்கும் போது அதனை மீட்கும் நடவடிக்கையை தவிர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்கள் ராஜபக்ச அன்ட் கம்பனி.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமும் அழுத்தங்களும் வெவ்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் உயர் பீடமான  நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளமை ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக தனது பாசமான அண்ணன் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற வேண்டிய தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்றன.

அழுத்தங்களை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை பதவியில் இருந்து விலக மகிந்த இணக்கம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்களுடன் அரசாங்கம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளும் காணப்படவுள்ளன.

இவ்வாறான பரபரப்பான நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்க அழைப்பார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராக இல்லை என்றால், அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க, அனைத்துக் கட்சிகளையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு அழைக்கவுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள், மாநாயக்க தேரர்கள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சைக்குழுவினர் நாட்டை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.