கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

0
295

யாழ்ப்பாணம் – ஊரெழு மேற்கில் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற குழந்தையே நேற்று மாலை 4 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரட்டையர்களான இரு குழந்தைகளும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேநீர் தயாரிக்கச் சமையலறைக்குச் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது குழந்தை ஒருவரைக் காணவில்லை. வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றைப் பார்த்த போது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

குழந்தையை உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கட்டுக் கிணற்றைச் சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே குழந்தை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டுள்ளார்.