கனடாவில் இந்திய இளைஞர் கொலையில் முக்கிய திருப்பம்: பொலிசார் வெளியிட்ட தகவல்

0
615

கனடாவில் இந்திய மாணவர் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கு தொடர்பில் 39 வயதான ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் என்பவரையே ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மாணவரான கார்த்திக் வாசுதேவ் மற்றும் எலிஜா எலியாசர் மகேபத் ஆகியோரின் மரணம் தொடர்பாக இரண்டு முதல் நிலை கொலை வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறை செவ்வாயன்று அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவரான 21 வயது கார்த்திக் வாசுதேவ் சுரங்க ரயில் நிலையத்திற்கு வெளியே, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டார்.

ஏப்ரல் 7ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் மாணவர் கார்த்தில், சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் சுமார் 48 மணி நேரத்திற்குப் பிறகு டன்டாஸ் மற்றும் ஜார்ஜ் தெருக்களுக்கு அருகில் நடந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

35 வயதான மகேபத், மளிகைப் பொருட்களை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான நபருக்கும், பாதிக்கப்பட்ட இருவருக்கும் எந்த அறிமுகமும் இல்லை எனவும், வாக்குவாதம் நடந்ததாகவும் ஆதாரம் இல்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.