வரலாற்றில் முதன் முறையாக மலையக மண்ணில் உலக நாடக விழா!

0
270

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் மலையக மண்ணில் உலக நாடக விழா, “THEATRE LOOP” ன் ஏற்பாட்டில் பரிசுத்த திரித்துவக் கல்லூரி நாடக மன்றத்தினால் கல்லூரியின் சௌமியமூர்த்தி கலையரங்கத்தில் நடத்தப்பட்டுள்ளது.கடந்த 27ஆம் திகதியன்று இந்த நாடக விழா பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது.

1961 ல் சர்வதேச நாடக நிறுவனம் என்ற அமைப்பு நாடகக்கலை மற்றும் கலைஞர்கள் மீதுள்ள அக்கறையால் ” உலகநாடக தினம்” ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவதற்கு முடிவுசெய்தது.

இதன்படி 1962ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ழான் கத்தேயூ ”தேசங்களின் அரங்கு” என்ற தலைப்பில் உலக நாடக தினத்திற்கான முதல் செய்தியை வழங்கினார்.

இலங்கையில் உலக நாடக தினமானது வருடம் தோறும் மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் முதல் தடவையாக நுவரெலிய பரிசுத்த திரித்துவ கல்லுாரியில் நடத்தப்பட்ட இந்த நாடக விழாவில் ஆசிரியர் பெ.சண்முகநாதனின் “வையத்தலைமை கொள்” ஆசிரியர் திருச்செல்வனின் “விட்டில்”,இ.லோகநாதனின் “மனசாட்சி ஓடுது விதி”,ஆசிரியர் வி.சுதர்சனின் “பரதனும் சீதையும்” மு.காளிதாஸின் “நாடக கலைஞர்” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

இவை சமுதாயத்தின் சகல பக்கங்களையும் வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தன.

இலங்கையின் நாடக வளர்ச்சியில் மலையகதத்தின் நாடக வளர்ச்சியும் பங்களிப்பும் அளப்பரியது.

அந்த நாடகத்துறை வளர்ச்சி, சமூகத்தின் கலை கலாசார பண்பாட்டு அடையாள குறீயீட்டுகளாகவும் இருந்தன.

அந்த வகையில் மலையக வரலாற்றில் பல நாடகங்கள் இங்கே அரங்கேற்றப்பட்டிருந்தாலும் கூட அவை துரதிர்ஷ்டவசமாக எழுத்துவடிவில் பாதுகாக்கப்படவில்லை என்ற விடயத்தை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.