வெறும் 8154 பந்துகளில் சாதனைப் படைத்த ரபாடா

0
411

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி அசத்தினார். இதன் மூலம் பல முன்னணி வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரபாடா.

பாகிஸ்தான் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடக்கிறது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 378 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் 158 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

இவர் பாகிஸ்தானின் ஹசன் அலியை வெளியேற்றுவதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். தனது 44 டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் ரபாடா. கடந்த 2015ல் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ரபாடா. இந்நிலையில் தற்போது 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய எட்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த சாதனை குறித்து ரபாடா கூறுகையில், “200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை மிகப் பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன். உங்களின் அணிக்காகச் சிறப்பாகச் செயல்படுவதை விட வேறு எதுவும் மகிழ்ச்சியும், திருப்தியும் அளித்துவிடாது” என்றார்.

இந்த மைல்கல்லை 8154-வது பந்தில் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் ரபாடா. வக்கார் யூனிஸ் (7730) மற்றும் டேல் ஸ்டைன் (7848) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அதேபோல தனது 44வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய ரபாடா, ஸ்டைன் (39 போட்டிகள்), ஆலன் டொனால்டு (42) ஆகியோருக்குப் பின் குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை எட்டிய தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அரங்கில் யாசிர் ஷா வெறும் 33 போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அதேபோல ரபாடாவை விட அதிவேகமாக இந்த மைல்கல்லை டெஸ்ட் அரங்கில் எட்டியவர்கள் வெறும் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே.