விபூதியை எப்படி அணிய வேண்டும்?

0
725

இந்து மதத்தில், விபூதி என்பது சின்னமாகும். விபூதி அணியாமல் செய்யப்படும் செயல்கள் பயனற்றவை என்று வேதங்கள் விபூதி என்ற சொல்லுக்கு மகிமை என்றும் பொருள் உண்டு. விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். பகவத்கீதையின் 10-வது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி யோகம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது. மங்கல சின்னமான விபூதியை அனைவரும் தவறாமல் அணிய வேண்டும். 

விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.

நம் முன்னோர்கள் விபூதி பற்றியும், விபூதியை நம் உடலில் அணியவேண்டிய அங்கங்கள், அதனால் ஏற்படும் பலன்கள் பற்றியும் சொல்லி உள்ளார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் நம்மில் ஒருசிலர் விபூதி அணிவதன் பலன் உணராமல் இருக்கிறார்கள்.

விபூதி அணியும் முறை

விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன. விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ளவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும்.

விபூதியை எடுக்கும்போது, ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் விபூதியை தரிக்கும்போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்கவேண்டும். விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும்.

விபூதி தரிக்கவேண்டிய நேரங்கள்:

காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.

உடலில் திருநீறு எங்கெல்லாம் அணியலாம்?

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, உச்சந்தலை; நெற்றி; மார்புப் பகுதி; தொப்புளுக்கு சற்று மேல்; இடது தோள்பட்டையில்; வலது தோள்பட்டையில்; இடது கை மற்றும் வலது கையின் நடுவில்; இடது மற்றும் வலது மணிக்கட்டில்; இடது மற்றும் வலது இடுப்புப் பகுதியில்; இடது மற்றும் வலது கால் நடுவில்; முதுகுக்குக் கீழ் பகுதி; கழுத்து முழுவதும்; இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழியில்.

விபூதி அணிவதால் கிடைக்கும் பலன்கள்

திருநீறு அணிவதால், மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை விலக்கும். நல்ல எண்ணங்கள் தோன்றும். நிலையான செல்வமும், நல்ல குடும்பம், நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம். உடல் ஆரோக்கியம் சிறக்கும். தகாத செயல்களைச் செய்வதில் இருந்து மனம் விலகிச் செல்லும். எந்த விதத்திலும் தொல்லைகள் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் கவசமாகத் திகழும்.

நெற்றிப் பொட்டில் உள்ள நீரை இழுத்து தலைவலி வராமல் இருக்க செய்யும்.