தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

0
835
Madurai branch order Tudukkadi District Collector

Madurai branch order Tudukkadi District Collector

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, தூத்துக்குடி தவிர்த்து மற்ற இரண்டு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இன்றைகுள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் கூறினர். இலவச சட்ட உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

இதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்படுவது தொடர்பாக, ஆறு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :