தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்; ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

0
29

யாழ்ப்பாணம் பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்த தடை உத்தரவு இருக்குமென மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தையிட்டி விகாரைக்கு அருகிலோ அதன் நுழைவாயில் வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டமோ ஊர்வலமோ பெயர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படக் கூடாது எனவும் நீதிமன்றின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன ரீதியிலான சீர்குலைவுகள் ஏற்படக்கூடும் என்ற ரீதியில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க விகாரைக்கு வழிபாட்டிற்காக செல்பவர்களுக்கு மாற்று வீதியொன்று அறிவிக்கப்பட்டு அதனைப் பயன்படுத்துமாறும் மல்லாகம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.