ரஷியாவில் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி தீவிர போராட்டம்

0
563

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார். இதில் கோமா நிலைக்கு சென்ற அலெக்சி, சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்த அலெக்சி, 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதி ரஷியா திரும்பினார்.அப்போது விமான நிலையத்தில் வைத்து ரஷிய போலீசார் அவரை கைது செய்தனர்.‌

மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அலெக்சி கைதுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அலெக்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷியாவை வலியுறுத்தின.

மேலும் அலெக்சியை உடனடியாக விடுவிக்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் ரஷியா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.‌ கடந்த வாரம் தலைநகர் மாஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அலெக்சியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

தனது கைதுக்கு எதிராக மாஸ்கோ பிராந்திய கோர்ட்டில் அலெக்சி தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் அலெக்சியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொரோனா காரணமாக பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் மாஸ்கோ உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் மாஸ்கோவில் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.‌ மாஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் மாஸ்கோ நகர் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.