பாகிஸ்தானில் மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்; சமூக வலைதளங்களில் வைரலான பதிவு

0
19

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டு வளர்ப்பில் இருந்து தப்பிய சிங்கம் சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த முழு சம்பவமும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட 11 மாத ஆண் சிங்கம் ஒன்று வீட்டின் தடுப்புச் சுவர்களைத் தாண்டி குதித்து வெளியே தப்பியுள்ளது.

இதையடுத்து அந்தச் சிங்கம் நேரடியாக சாலையில் சென்ற ஒரு பெண்ணை விரட்டி அவரைத் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தச் சிங்கம் அங்கிருந்த 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகளைத் தாக்கியதில் அவர்களது கைகளிலும் முகங்களிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அந்தச் சிங்கத்தை விரட்டி வந்த அதன் உரிமையாளர்கள் மூன்று பேர் அதைப் பிடித்து இழுத்துச் சென்று தலைமறைவாகினர்.

இந்நிலையில் அந்நாட்டு பொலிஸார் வனவிலங்கின் உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த அந்தச் சிங்கத்தை மீட்டு வனவிலங்குப் பூங்காவில் ஒப்படைத்தனர்.

முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வீட்டில் சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளை வளர்ப்பது உயர்ந்த அந்தஸ்தாகக் கருதப்படுகிறது. இதனால் பலரும் அங்கு சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வாங்கி வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.