யாழில் ஐந்து திருமணம் செய்த நபர்; சொத்து கேட்டு தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்!

0
31

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அவரது 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவனை பிரிந்த தாயும் அவரது மகனும் தனியாக வீட்டில் வசித்து வந்தநிலையில் பளை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் அராலி பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு வந்திருந்தபோது அவருக்கும் பெண்ணுக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கூறி அப்பெண் மீதும் பெண்ணின் மகன் மீதும் தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டு மனநலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதோடு அப்பெண்ணின் நிலைக்கு தானே காரணம் என்றும் அந்த நபர் அயல்வீட்டாருக்கு கூறியுள்ளார்.

பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சந்தேக நபர் சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தி சிறுவனை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

யாழில் ஐந்து திருமணம் செய்த நபர் ; சொத்து கேட்டு தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்! | Man Married 5 Times Jaffna Attacks Mother And Son

இதனையடுத்து சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டபோது சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும் சந்தேக நபரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சம்பவம் தொடர்பில் பளை பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் இன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.