வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் அத்தகைய நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் எந்த தொடர்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகள் ஒரு நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். நவம்பர் 27 அன்று மாவீரர் நாளின் போது அவர்களின் அடையாளங்கள், சீருடைகள் அல்லது அவர்களின் உறுப்பினர்களின் படங்களை காட்சிப்படுத்த எந்த அனுமதியும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
சில குழுக்கள் கடந்த கால நினைவு தினங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மீள் விளக்கமளிக்க முற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.