மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Ravi Haran) பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேற்றையதினம் (24.11.2024) நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன் இடம்பெற்ற துயரச்சம்பவம் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அத்தோடு மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலை தொடர்பிலும் விசாரித்துள்ளார்.
இந்த விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தப்பட்டு நீதியைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதன்போது தெரிவித்துள்ளார்
இதன்போது இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட செ.டினேசனும் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.