J.R.க்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசாங்கம்: மூன்றில் இரண்டு குறித்து எச்சரிக்கை ஒலி

0
36

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தை சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைக்க உள்ளதுடன் 25 பேருக்குள் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என அரச தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை வரலாற்றில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தவராக இன்றளவும் பிரபல்யமாக உள்ளவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன.

1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் கூடிய மக்கள் ஆணை J.R.ஜெயவர்தனவிற்கு கிடைக்கப் பெற்றதோடு நாட்டின் 6ஆவது பிரதமராக தெரிவானார்.

இந்த பெரும்பான்மையை பயன்படுத்தி இலங்கையின் ஜனநாயக சோஷலிச குடியரசின் இரண்டவாது அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியதுடன் குறித்த அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்ற திருத்தத்தையும் உள்வாங்கியிருந்தார்.

1978ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுடன் பல்வேறுக் கட்சிகள் கூட்டணிகள் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றில் பெற்றுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச கூட்டணியின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கிய 18ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியிருந்தார். என்றாலும் 2015இல் அமையப் பெற்ற நல்லாட்சி அரசாங்கம் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் ஆதரவுடன் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 145 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி 19ஆவது திருத்தச்சட்டத்தில் குறைக்கப்பட்ட நிறைவேற்றி அதிகாரத்தின் சில அதிகாரங்களை மீண்டும் பலப்படுத்திக் கொண்டார்.

1978ஆம் ஆண்டின் பின்னரும் 2010ஆம் ஆண்டுக்கு முன்னரும் எந்தவொரு அரசியல் கூட்டணியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.

1978ஆம் ஆண்டுக்கு பின்னர் தனித்த ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியே முதல் முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

1978ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு காரணமாகவும் அதில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, விருப்ப வாக்கு முறையிலான தேர்தல் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் இந்த நாட்டில் இன்றளவும் இன, மத மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன.

அதன் காரணமாகவே புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவரும் நோக்குடன் பலம் வாய்ந்த நாடாளுமன்றமொன்றை தமக்கு வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி மக்களிடம் கோரியது. தேசிய மக்கள் சக்தியின் கோரிக்கையின் பிரகாரம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தனித்த ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மையானது நாட்டுக்கு பாரிய சேதங்களையே ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான கோசங்கள் இந்த பொதுத் தேர்தலிலும் ஒலித்திருந்தன.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அக்கட்சியின் போக்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.