அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று; வெல்லப்போவது யார்?; ஆவலுடன் காத்திருக்கும் உலகம்!

0
52

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறாவுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.

தற்போதைய ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவி காலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. அமெரிக்கா சட்டப்படி நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை.

மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

இந்த தேர்தலில் 16 கோடியே 50 லட்சம் பேர் தகுதி படைத்த வாக்காளர்களாக உள்ளனர். அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்த முடியும்.

அந்தவகையில் இ-மெயில் மற்றும் தபால் மூலம் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்தது.

கருத்து கணிப்புகளில் இருவரும் சமபலத்திலேயே இருந்து வந்தனர். 50 மாகாணங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களாக அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை உள்ளன.

இதில் மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய 2 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். மற்றவற்றில் டிரம்பே முன்னிலையில் இருக்கிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவினை அடுத்து ஆளப்போகின்றவர் யார் என்கின்ற எதிர்பார்ப்பு உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.