லொஹான் ரத்வத்த பெயரில் மற்றுமொரு வாகனம் கண்டுபிடிப்பு!

0
52

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பயன்படுத்தியதாக கூறப்படும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான மிட்ஷூபிஷி வகையிலான ஜீப் வண்டி ஒன்றை தெல்தெணிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி திகண ஐ.சீ.சீ குடியிருப்புத் தொகுதியில் காணப்படும் வீடொன்றில் இருந்து குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் அற்ற வீடொன்றின் கராஜில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனத்தின் இலக்கத் தகடு தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது கண்டி பிலவல பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான சிவப்பு நிற ப்ராடோ ரக வாகனமொன்றின் இலக்கத்தகடு என தெரியவந்துள்ளது.

அந்த வாகன இலக்கத்தை பயன்படுத்தி இந்த ஜீப் வண்டியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதேவேளை லொஹான் ரத்வத்தேவின் மனைவிக்கு சொந்தமான மிரிஹான பொலிஸ் பிரிவின் எம்புல்தெனிய வீதியில் காணப்படும் மூன்று மாடி வீட்டின் வாகன கராஜில் இருந்து கடந்த 26ஆம் திகதி அதிசொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் லொஹான் ரத்வத்தே எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திகண பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போலியான இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.