பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க போவதில்லை; அரசாங்கம் திட்டவட்டம்!

0
28

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனை ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு) சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம்.

சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் என கூறிய அவர் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

அதேசமயம் நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்புத்தகங்களில் வேறு பல சட்டங்கள் உள்ளன,ஆனால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.

எங்கள் நாட்டின் சட்டத்தில் மரணதண்டனையும் உள்ளது ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்கும் ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதி பொதுமன்னிப்பிற்கும் எங்கள் சட்டத்தில் இடமுள்ளது.

ஆனால் பாரதூரமான தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பயங்கரவாத தடைச்சட்டமும் ஒரு சட்டமே என்றும் அது தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு) சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார தெரிவித்தார்.